ஞாயிறு, 17 ஜனவரி, 2016

நோபல் பரிசு பற்றி தெரியுமா?


எந்தெந்த துறைகளுக்கு நோபல் பரிசு வழங்கப்படுகின்றன? நோபல் பரிசை துவக்கிய ஆல்பிரட் நோபல், இந்த பதக்கங்களை, அறிவியல் துறையினரை ஊக்குவிக்கவே உருவாக்கினாலும், பிற்பாடு பிற துறைகளையும் சேர்த்து கவுரவிக்கிறது நோபல் கமிட்டி. 
இயற்பியல், வேதியியல், மருத்துவம், இலக்கியம், அமைதிச் சேவை, பொருளாதாரம் ஆகிய ஆறு துறைகளில், ‘மைல்கல்’ சாதனைகளை புரிபவர்களுக்கு இப்போது நோபல் பரிசு வழங்கப்படுகிறது. இதுவரை வழங்கப்பட்ட நோபல் பரிசுகளின் எண்ணிக்கை எவ்வளவு? இதுவரையிலுமாக வழங்கப்பட்ட மொத்தப் பதக்கங்கள், 567 தனியாகவும், இருவராக, மூவராக என, பகிர்ந்தும் வழங்கப்படும் நோபல் பதக்கங்களை, 2014ம் ஆண்டு வரை, மொத்தம், 889 பேர் வென்றிருக்கின்றனர்.
ஒரு தடவைக்கு மேல் நோபல் வென்றவர்கள் உண்டா?
இரண்டு முறைக்கும் மேல் யாரும் வென்றதில்லை. இருமுறை வென்றவர்கள் நான்கு பேர் மட்டுமே, மேரி க்யூரி, லினஸ் பாலிங், ஜான் பார்டீன் மற்றும் பிரடெரிக் சாங்கர்.
நோபல் பரிசு எந்த நாட்டில் வழங்கப்படுகிறது?
ஐந்து துறைகளுக்கான நோபல்கள் சுவீடனிலுள்ள ஸ்டாக்ஹோம் நகரில் வழங்கப்படும்; அமைதிக்கான நோபல் மட்டும், நார்வேயிலுள்ள ஆஸ்லோ நகரில் வழங்கப்படுகிறது.
நோபல் பரிசுகள் வழங்கப்படாமல் போனதுண்டா?
இதுவரை, 49 நோபல்கள் வழங்கப்படாமலேயே போனதுண்டு. பெரும்பாலும் முதலாம்
உலகப்போர் நடந்த போதும், இரண்டாம் உலகப்போர் நடந்தபோதும் இந்த பரிசுகள் பல்வேறு காரணங்களால் வழங்கப்படவில்லை.
நோபல் பரிசு பெறுவதற்கும், வயதுக்கும் தொடர்பு உண்டா?
இதுவரை நோபல் வென்றவர்களின் கூட்டு சராசரி வயது, 59. அதாவது, பணியிலிருந்து ஓய்வு பெற்ற பின்தான் நோபல் கிடைக்கும் என்பது போலத் தெரிகிறது. கணிசமான நோபல் வெற்றியாளர்கள் பரிசு பெறுகையில், 60 முதல், 64 வயது வரை ஆகிவிடுகிறது.
மிக இளம் நோபல் வெற்றியாளர்கள் யார்?
கடந்த, 2014ல், தன், 17வது வயதிலேயே அமைதிக்கான நோபல் வென்ற மலாலா யூசப்சாய்; அறிவியல் துறையில் மிக இளம் வயதில் நோபல் வென்றவர், வில்லியம் லாரன்ஸ் பிராக். 1915ல் இயற்பியலுக்கான நோபல் பரிசை தன் தந்தை ஹென்றி லாரன்ஸ் பிராக்குடன் பகிர்ந்து கொண்டார்.
மிக அதிக வயதில் நோபல் வென்றவர் யார்?
பொருளாதாரத்திற்காக, 2007ல் நோபல் பரிசை வென்ற லியோனித் ஹுர்விக்ஸ். 1917ல் ரஷ்யாவில் பிறந்த இவர், பிறகு, அமெரிக்காவில்
குடியேறினார். நோபல் வெல்லும்போது அவருக்கு வயது, 90. அவருடன் வேறு இருவரும் பதக்கத்தை பகிர்ந்துகொண்டனர்.

நோபல் பதக்கத்துடன் ரொக்கம் எத்தனை
தருவார்கள்?
பதக்கம் தரத்துவங்கிய, 1901லிருந்து தொகை மாறிக்கொண்டே வந்தாலும், ஏறிக்கொண்டேயும் வந்திருக்கிறது; 2015ல், ஒவ்வொரு பதக்கதாரருக்கும், 6 கோடியே 30 லட்சத்து 70 ஆயிரத்து 460 ரூபாய் கிடைக்கும்.
நோபல் பதக்கம் தங்கத்தால் ஆனதா?
ஆம்! 1980 வரை, 23 கேரட் தங்கத்தால் பதக்கத்தை வார்த்தெடுத்தனர். அதன்பின், 18 கேரட் பசும் பொன்னில் வார்த்தெடுத்து, பின், 24 கேரட் தங்க முலாம் பூசப்படுகிறது. பதக்கத்தின் எடை பரிசைப் பொறுத்து சற்று வேறுபடும் என்றாலும், சராசரியாக, ஒரு பதக்கத்தின் எடை, 175 கிராம் இருக்கும். கூடவே பாராட்டுச் சான்றிதழும், ரொக்கமும் தரப்படுகிறது.
நன்றி : செய்தி பகிர்வு
suresh

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக