வெள்ளி, 22 ஜனவரி, 2016

புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்யக் கோரி அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்யக் கோரி அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து, நடைமுறையிலுள்ள பயனளிப்பு ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட 20 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை முன் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலர் ஆர்.பாலசுப்பிரமணியன் தலைமை வகித்தார். கருணை அடிப்படையிலான பணி நியமனங்களை உடனே வழங்க வேண்டும், குடும்பப் பாதுகாப்பு நிதியை ரூ.10 லட்சமாக உயர்த்த வேண்டும். மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான படிகள் வழங்க வேண்டும், காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைள் வலியுறுத்தப்பட்டன. இதுகுறித்து ஆர்.பாலசுப்பிரமணியன் கூறியதாவது:
கோரிக்கைகள் அடங்கிய மனுவை தலைமைச் செயலர் கே.ஞானதேசிகனை நேரடியாகச் சந்தித்து அளித்தோம். இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் கூறியுள்ளார். பிப்ரவரி 10-இல் வேலைநிறுத்தம்: இருப்பினும் திட்டமிட்டபடி பிப்ரவரி 10-ஆம் தேதி தமிழகம் முழுவதும் கால வரையற்ற வேலை நிறுத்தப்போராட்டம் நடைபெறும் என்றார்.
சங்கத்தின் மாநிலத் தலைவர் இரா.தமிழ்ச்செல்வி, துணைத் தலைவர் கிருஷ்ணசாமி,தலைமை செயலக தலைவர் கணேசன்,தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநிலத்தலைவர் எஸ்.மோசஸ் உள்பட பல்வேறு பல்வேறு சங்கங்களைச் சேர்ந்த நிர்வாகிகளும், தமிழகம் முழுவதும் வந்திருந்த அரசு ஊழியர்களும் பங்கேற்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக