புதன், 3 பிப்ரவரி, 2016

ஏப்ரல் 1-ந் தேதி முதல் 100 நாள் வேலைத்திட்ட சம்பளம் வங்கி கணக்கில் செலுத்தப்படும்: மத்திய அரசு அறிவிப்பு

கிராமப் புறங்களில் வேலைவாய்ப்பை உருவாக்குவதற்காக, கடந்த காங்கிரஸ் கூட்டணி ஆட்சிக் காலத்தில், ஆண்டுக்கு 100 நாள் வேலை வழங்கும் திட்டம் கொண்டுவரப்பட்டது. இதற்கு ‘மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உருவாக்க திட்டம்’ என்று பெயர்.இந்த திட்டத்தின் கீழ் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு ஒரு நாள் சம்பளமாக ரூ.100 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது, ரொக்கமாக வழங்கப்படுகிறது.


இந்த சம்பளத்தில் ஒரு பகுதியை இடைத்தரகர்கள் பிடித்துக் கொண்டு, மீதியை மட்டுமே பயனாளிகளிடம் வழங்குவதாக புகார்கள் வந்து கொண்டிருக்கின்றன.இந்த முறைகேட்டுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், 100 நாள் வேலைத்திட்ட சம்பளம் அனைத்தும் பயனாளிகளின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த திட்டம் தொடங்கப்பட்டு, 10 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு, டெல்லியில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில், மத்திய ஊரக மேம்பாட்டுத்துறை மந்திரி சவுத்ரி வீரேந்திர சிங் இதை அறிவித்தார்.

அவர் மேலும் கூறியதாவது:-ஏப்ரல் 1-ந் தேதியில் இருந்து, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் அனைத்து சம்பளங்களும் பயனாளிகளின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படும். இப்போது, 94 சதவீத சம்பளங்கள் பயனாளிகளின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்பட்டு வருகின்றன.மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்ட நிதி, மாநிலங்களுக்கு தாமதமின்றி வழங்கப்படுவதால்தான், அந்த திட்டம் வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது.மொத்த செலவில் 64 சதவீதம், விவசாயம் மற்றும் அதைச்சார்ந்த பணிகளுக்குத்தான் செலவிடப்படுகிறது. நாட்டின் 57 சதவீத தொழிலாளர்கள் பெண்கள்தான். இது சட்டப்பூர்வ ஒதுக்கீடான 33 சதவீதத்துக்கும் அதிகமாகவே உள்ளது.இவ்வாறு சவுத்ரி வீரேந்திர சிங் பேசினார்.

இந்த நிகழ்ச்சியில், மத்திய ஊரக மேம்பாட்டுத்துறை இணை மந்திரி சுதர்சன் பகத் பேசுகையில், ‘மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம் தொடங்கியதில்இருந்து செலவிடப்பட்ட தொகை ரூ.3 லட்சத்து 13 ஆயிரத்து 844 கோடியாக உயர்ந்துள்ளது. இதில் 71 சதவீத தொகை, சம்பளத்துக்காக செலவிடப்பட்டுள்ளது. இனிவரும் ஆண்டுகளில், இத்திட்டத்தின் நடைமுறைகள் எளிமைப்படுத்தப்படும்’ என்று கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக