வியாழன், 7 ஜனவரி, 2016

சேவை மையங்களில் வாக்காளர் அட்டை


      சென்னை: அரசு பொது சேவை மையங்களில், வாக்காளர் அட்டை வழங்க, தேர்தல் கமிஷன் முடிவு செய்துள்ளது.இதுகுறித்து, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லகானி கூறியதாவது:வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்தம் செய்தல் போன்ற பணிகள், அரசு பொது சேவை மையங்கள் மூலம் மேற்கொள்ளப்படுகின்றன; 
      இம்மையங்களில், வாக்காளர் அடையாள அட்டையும் வழங்க முடிவு செய்துள்ளோம்; தேர்தல் கமிஷனிடம் அனுமதி கேட்டுள்ளோம்.தற்போது, புதிய அட்டை வழங்க வசூலிக்கப்படும், 25 ரூபாய் கட்டணத்தை, 15 ரூபாயாகக் குறைக்கவும், தேர்தல் கமிஷனுக்கு பரிந்துரை செய்துள்ளோம்.மேலும், வாக்காளர் பட்டியலில், முகவரி மாற்றம் செய்வதை எளிமைப்படுத்த, புதிய, 'சாப்ட்வேர்' உருவாக்கப்பட்டுள்ளது. அதில், வாக்காளர் அட்டை எண்ணை பதிவு செய்தால், பழைய முகவரி வரும். அதன் அருகே புதிய முகவரியை, 'டைப்' செய்தால் போதும்; தானாகவே பழைய முகவரி 


அகற்றப்பட்டு, புதிய முகவரி சேர்க்கப்படும்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.

"அரசு அலுவலர்களை இடமாற்றம் செய்வதால் தேர்தல் பணிகளில் பாதிப்பு ஏற்படும்

'

       அரசு அலுவலர்கள் இடமாற்றம் செய்யப்படுவதால் தேர்தல் பணிகளில் பாதிப்பு ஏற்படும் என்று, தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலர் சங்க மாநிலச் செயலர் மங்களபாண்டியன் தெரிவித்துள்ளார்.
         பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜனவரி 7இல் நடக்கவுள்ள ஒரு நாள் தற்செயல் விடுப்புப் போராட்டத்தின் பிரசாரப் பயணமாக, செவ்வாய்க்கிழமை சிவகங்கை வந்திருந்த இவர், செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:
  ஊதிய முரண்பாடுகள் நீக்கப்படவேண்டும், கடந்த சட்டபேரவைத் தேர்தலில் தமிழக முதல்வர் ஜெயலலிதா அளித்திருந்த வாக்குறுதிப்படி புதிய ஓய்வூதியத் திட்டம் ரத்து செய்யப்பட வேண்டும். வருவாய்த் துறையில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, வரும் 7 ஆம் தேதி மாநிலம் முழுவதும் தற்செயல் விடுப்புப் போராட்டம் நடத்தப்பட உள்ளது.

  அதன்பின்னரும் கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லையெனில், பிப்ரவரி 10 முதல் காலவரையற்ற போராட்டம் நடத்தப்படும்.
தேர்தல் நடக்கவிருக்கும் நிலையில், 3 ஆண்டுகள் ஒரே இடத்தில் பணிபுரியும் அரசு அலுவலர்களை இடமாற்றம் செய்வது தேவையற்றது. நாங்கள் அரசு வேலை மட்டுமே செய்கிறோம். எந்தக் கட்சிக்கும் சாத கமாகச் செயல்படவில்லை. தற்போது, மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் மூலமே வாக்குப் பதிவு நடைபெறுகிறது.
  தேர்தல் நடத்தும் நேரடி உயர் அலுவலர்களை இடமாற்றம் செய்வதில் பிரச்னை இல்லை. ஆனால், அடுத்த நிலைகளில் உள்ள அலுவலர்களை இடமாற்றம் செய்வதால், புதிதாக வருபவர்களுக்கு சம்பந்தப்பட்ட இடம், சூழ்நிலைகள் தெரியாது. எனவே, தேர்தல் பணிகளில் பாதிப்பு ஏற்படுமே தவிர, நன்மை கிடைக்காது என்றார்.
  பேட்டியின்போது, மாவட்டத் தலைவர் தமிழரசன், நிர்வாகக் குழு உறுப்பினர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.

புதிய கல்விக் கொள்கை தயாரிப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள குழுவை கலைக்க வேண்டும்'

       தேசிய அளவில் புதிய கல்விக் கொள்கை தயாரிப்பதற்காக மத்திய அரசு அமைத்துள்ள குழுவை கலைக்க வேண்டும் என கத்தோலிக்க கல்வி நிறுவனங்களின் பிரதிநிதிகள் வலியுறுத்தியுள்ளனர்.
         தேசிய புதிய கல்விக் கொள்கை உருவாக்கம் தொடர்பாக கோவை ராமநாதபுரம் மறைமாவட்ட கத்தோலிக்க கல்வி நிறுவனங்கள், ஆசிரியர்கள் அமைத்துள்ள குழுவின் கருத்தரங்கு கோவையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

குழுவின் ஒருங்கிணைப்பாளரும் ராமநாதபுரம் ஆயருமான மார்ட் பவுல் ஆல்பர்ட் தலைமை வகித்தார். கல்வியாளர் ஸ்டீபன் பிரகாசம், பொதுப் பள்ளிக்கான மாநில மேடை அமைப்பின் பொதுச் செயலர் பிரின்ஸ் கஜேந்திர பாபு, பாதிரியார் எஸ்.எம்.ஜான் கென்னடி ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர்.
கருத்தரங்கைத் தொடர்ந்து, பிரின்ஸ் கஜேந்திர பாபு செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தேசிய கல்விக் கொள்கையை உருவாக்குவதற்காக அமைக்கப்பட்டுள்ள கல்விக் குழுவில் கல்வியாளர்களே இடம் பெறாமல் இருப்பது இதுவே முதல் முறை. இந்தியா கூட்டாட்சி நாடு என்பதால் அனைத்து மாநிலங்களையும் சேர்ந்த கல்வியாளர்களையும் கல்விக் குழுவில் இணைத்திருக்க வேண்டும்.
பின்னர் அந்தக் குழுவினர் மக்களிடம் நேரடியாக பொது விசாரணை நடத்தி, அதன் பிறகு கல்விக் கொள்கை உருவாக்கப்பட வேண்டும் என்றார்.

புதன், 6 ஜனவரி, 2016

தமிழில் 'இனிஷியல்!' ஆசிரியர்களுக்கு உத்தரவு


அரசாணைகள், உத்தரவுகள் அனைத்தும், தமிழிலேயே வெளியிட வேண்டும்' என, ஐந்தாண்டுகளுக்கு முன், தமிழக அரசு உத்தரவிட்டது. அதேபோல், 'கல்வி அதிகாரிகள் முதல், ஊழியர்கள் வரை, தமிழில் கையெழுத்து போட வேண்டும்' என, அறிவுறுத்தப்பட்டுள்ளது.

'பள்ளி கல்வித் துறையில் ஆசிரியர்கள், அதிகாரிகள் மற்றும்அலுவலர்கள், தமிழில் கையெழுத்து போடுகின்றனர்; ஆனால், ஆங்கிலத்தில் தங்களின் இனிஷியலை எழுதுகின்றனர்' என, துாத்துக்குடிமாவட்டத்தைச் சேர்ந்த குணமால் என்பவர், பள்ளி கல்வி முதன்மைச் செயலருக்கு கடிதம் அனுப்பியிருந்தார். அதை பரிசீலித்த செயலகம், அனைத்து ஆசிரியர்கள், அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள், தமிழில் கையெழுத்து போடவும், இனிஷியலாக இருந்தாலும், அதையும் தமிழில் எழுதவும் உத்தரவிட்டுள்ளது.இது தொடர்பான சுற்றறிக்கையை, பள்ளி கல்வி இயக்குனர் கண்ணப்பன், அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பியுள்ளார். இனிஷியல் என்பது, தந்தைஅல்லது கணவர் பெயரின் முதல் ஆங்கில எழுத்தாக பெரும்பாலும் கருதப்படுகிறது. 

தமிழகத்தில் மீண்டும் மக்கள் தொகை கணக்கெடுப்பு: ஜனவரி 18ல் துவக்கம்


மக்கள் தொகை விபரத்தை உறுதிப்படுத்த, தமிழகத்தில் ஜன.,18 முதல் பிப்.,5க்குள் 2வது முறையாக ஆசிரியர்கள் வீடுகள் தோறும் கணக்கெடுப்பு நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 2011ல் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.இதில் ஈடுபட்ட ஆசிரியர்கள் வீடுகள் தோறும் சென்று வீட்டில் உள்ள தலைவர், தலைவி பெயர், குழந்தைகள், அசையும், அசையா சொத்துக்கள், எலக்ட்ரானிக் பொருட்கள் போன்ற 42 விதமான விபரங்களை சேகரித்து, மக்கள் தொகை கணக்கெடுப்பு விண்ணப்பத்தில் பூர்த்தி செய்தனர்.


இந்நிலையில், மீண்டும் தமிழகத்தில் மக்கள் தொகை விபரங்களை உறுதிப்படுத்தும்விதமாக, 2ம் கட்டமாக ஆசிரியர்களை கொண்டு வீடுகள் தோறும் கணக்கெடுப்பு நடத்த ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.2011ல் மாநகராட்சி, நகராட்சி,பேரூராட்சி, கிராம ஊராட்சி பகுதிகளில் கணக்கெடுப்பு நடத்திய அதே ஆசிரியர்களே இப்பணிகளில் ஈடுபட வேண்டும். இப்பணியை ஜனவரி 18ல் துவக்கி பிப்ரவரி 5க்குள் முடிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.கணக்கெடுப்பு எப்படி: 2011ல் எடுத்த கணக்கெடுப்பு விபரத்துடன் கூடிய விண்ணப்பம் ஆசிரியர்களுக்கு 'பிரிண்ட் அவுட்' செய்து வழங்கப்படும். அந்த விண்ணப்பத்தையே வீடுகள் தோறும் எடுத்துச் சென்று, வீட்டில் உள்ள குடும்ப தலைவர், தலைவி பெயர் சரியாக உள்ளதா, குழந்தைகள் மற்றும் இதர விபரங்கள் சரியாக உள்ளதா என சரிபார்க்க வேண்டும். இதில் கூடுதலாக ஆதார் அட்டை, ரேஷன் கார்டு, அலைபேசி எண்களை கண்டிப்பாக கேட்டு பெற வேண்டும். 2011க்கு பின் பிறந்த குழந்தை இருந்தால், அவர்களது விபரம், மாறுதலாகி சென்ற குடும்பத்தினர், புதியதாக திருமணம் முடித்தோர் விபரங்களை கூடுதலாக சேகரிக்குமாறு, ஆசிரியர்களுக்கு அரசு அறிவுறுத்தியுள்ளது.
மக்கள் தொகை கணக்கெடுப்பு உதவி இயக்குனர் ஒருவர் கூறுகையில், “வீடுகள் தோறும் வரும் ஆசிரியர்களுக்கு குடும்ப தலைவர்கள் முழு விபரம் வழங்கி, ஒத்துழைப்பு தர வேண்டும். ஆதார் அட்டை, ரேஷன் கார்டு, அலைபேசி எண்களை ஆசிரியர்களிடம் கண்டிப்பாக வழங்க வேண்டும். ஆதார் அட்டை இல்லாதோர் மக்கள்தொகை பதிவேடு (இ.ஐ.டி.,எண்) எண்ணை காண்பிக்கலாம். இக்கணக்கெடுப்பு படி தான், ரேஷன் கார்டுக்கு 'ஸ்மார்ட் கார்டு' தயாரிக்கும் திட்டம் உள்ளது.எனவே மக்கள் உண்மையான தகவலை தரவேண்டும்,” என்றார். 

பயிற்சி